Raghuvamsam Book review in Tamil

ரகுவம்சம் - புத்தக விமர்சனம்ஆசிரியர் - திரு. அ. வே. சுப்பிரமணியன்

"ராமவம்சத்தைப் பற்றிய இந்தக் காவியத்துக்கு, ரகுவம்சம் என்ற பெயர் ஏன் வந்தது?" என இப்புத்தகத்தின் பெயர் காரணம் மூலம் ஆரம்பித்திருக்கும் ஆசிரியர் திரு. அ. வே. சுப்பிரமணியன் மகாகவி காளிதாசனின் காவியத்தை தமிழில் நமக்கு தந்திருக்கிறார். பொதுவாக விமர்சனங்களில் எழுதப்படாத சட்டம் என்னவெனில் ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்தை பற்றி விமர்சனம் எழுதும் முன் அதன் ஆதார நூலை அதன் தாய் மொழியிலேயே படித்துவிட்டு பிறகு அந்த மொழிபெயர்த்த நூலை படித்தால் எவ்வளவு தூரம் ஆசிரியர் அந்நூலின் சுவை குன்றாமல் மொழிபெயர்த்திருக்கிறார் என்பது புலப்படும். ஆனால் எனக்கு இந்நூலை படித்து முடித்த சமயம் மேலே கூறிய நிபந்தனை தேவையில்லை என்றே தோன்றியது. அந்த அளவிற்கு காளிதாசனின் மனதையும், அவரது கற்பனை திறத்தையும் பிரதிபலித்திருக்கிறார் ஆசிரியர்.

ராமனின் முன்னோராகிய திலீபன், ரகு, அஜன், தசரதன் ஆகியோரைப் பற்றியும், ராமனுக்குப் பின்னால் தோன்றிய மற்ற ரகுவம்ச அரசர்களைப் பற்றிய வரலாறுகளையும் பல உவமைகளோடு மிக அழகாக எடுத்துக் கூறுகிறது இந்நூல்.

திலீபன் தன் மனைவி சுதட்சிணை மேல் கொண்ட காதலை விவரித்த விதம் அத்தம்பதியினரின் காதலை நேரில் கண்டு ரசித்தது போல் உள்ளது.

கர்ப்பக் காலத்தில் மண்ணை உண்ணும் மனைவியின் வாயை முகர்வதில் ஆசை வளர்ந்தது என்று கூறும்போதும் கர்ப்பம் தரித்திருக்கும் மனைவியை அக்கினிப் பிழம்பை தன்னகத்தே கொண்டுள்ள பூமி தேவிக்கு சமமாக ஒப்பிடும் பொழுதும்

திலீபனின் காதல் படிப்பவர்களையே பொறாமை கொள்ளச் செய்கிறது.

"அரசனாகிய நான், நாட்டின் வருவாய் எவ்வளவோ அதில் ஆறில் ஒரு பங்கைத்தான் எடுத்துக்கொள்வது என் வழக்கம்" எனக் கூறும் திலீபனின் வார்த்தைகள் இன்றைய கால சில பல அரசியல்வாதிகளுக்கு இம்மியளவும் விளங்காது.

தமிழ் கடவுளான முருகன் அன்றே வடக்கிலும் பிரபலம் என்பதற்க்கு எடுத்துக்காட்டாக "தெய்வ நதியாகிய கங்கை, முருகக் கடவுளை அக்கினி வடிவத்தில் தன்னகத்தே வைத்துக் காத்தது போல" என்று காளிதாசன் ஒரு உவமையின் வாயிலாக உணர்த்துகிறார்.

ரகு தனது படைகளின் துணை கொண்டு உலகின் பல நாடுகளைக் கைப்பற்றுகிறான். ரகு படையெடுக்கும் ஒவ்வொரு நாடுகளின் தனிச் சிறப்பைப் பற்றிக் கூறுகையில் அக்காலத்தில் மக்கள் எவ்வளவு வளமாக வாழ்ந்து வாழ்ந்தனர் என்பது புலப்படுகிறது.

அஜன் இந்துமதியை திருமணம் செய்து தன் நாட்டிற்கு கூட்டி வரும் கதையை படிக்கையில் ஏதோ தமிழ் சினிமா பார்த்தது போன்ற ஒரு உணர்வு ஏற்ப்படுகிறது.

வேட்டைக்குச் சென்ற தசரதன் தோகை விரித்தாடும் ஒரு மயிலைப் பார்க்கையில் இரவிலே கலவிக் காலத்தில் தம் தலைமயிர் அவிழ்ந்த நிலையிலிருக்கும் அந்தப்புரப் பெண்களை நினைவு கொள்கிறான் என வர்ணிக்கும் போது ஆசிரியரின் கற்பனை ஊற்று நம்மை பிரம்மிக்க வைக்கிறது. தசரதனுக்குப் பிறகு வரும் ராமனின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுவதால் ராமனின் கதையை ஏற்கனவே நன்கு அறிந்தவர்களுக்கு, படிக்கும்பொழுது சலிப்பு ஏற்ப்படுவதில்லை.

இந்நூலில் ராமன் மற்றும் ராமனுக்கு முன் இருந்த ராஜாக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. ராமனுக்குப் பிறகு வரும் ரகுவம்ச ராஜாக்கள் அத்தனை சோபிக்கவில்லை போலும். ராமன் காலத்துக்குப் பின் வந்த கிட்டத்தட்ட ஆறு ஏழு ராஜாக்களின் கதையை ஒரே பாகத்தில் முடித்திருக்கிறார் காளிதாசன்.

மொத்தத்தில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் இருக்கும் இந்நூல், இலக்கியத்தை விரும்புவோருக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

இப்புத்தகத்தை வாங்க விரும்புவோர் கீழ்கண்ட இணைய முகவரியை அழுத்தவும்.

http://nhm.in