Temple Bell - A Story in Tamil
டிங் டாங் கோயில் மணி - Jeyanth
காலையில் கோயில் மணி கேட்ட பின் தான் ரங்கசாரிக்கு பொழுதே விடிந்த மாதிரி இருக்கும்.. அதன் பின் தான் தன்னுடைய பூஜையை ஆரம்பிப்பார்.
"ஐயா... நான் வேலாயி வந்துருக்கேன்.." .வேலாயி, மாநகராட்சி துப்பறவுத் தொழிலாளி.
"இவளுக்கு வேற வேலைய இல்ல.. மாசம் 1 ஆனா வந்துடுவா.." என்று மனதுக்குள் திட்டி கொண்டே வாசலுக்கு வந்தார்."ஏம்மா எத்தன தடவ சொல்லியாச்சு .. கோயில் மணி அடிச்சு கால் மணி நேரம் கழிச்சு வான்னு..."
"இல்ல சாமீ நான் நாலு வீட்டுக்கு போனும்".. என்றாள் வேலாயி. யார் யார் வீட்டுக்கு இவளே போயி குப்பையை எடுப்பாளோ அங்கு மட்டுமே 10 ரூபாய் வாங்க வருவாள். குப்பையை அவர்களே வந்து வண்டியில் கொட்டினால் வாங்க மாட்டாள்.
"சரி சரி ...." என்று மனதுக்குள் ஏதோ முனங்கி கொண்டே உள்ளே சென்று தன் சட்டை பையில் இருந்த 10 ரூபாய் நோட்டை எடுக்கும் போது தன் 10 வயது பேரன் உறங்கு வதை பார்த்தார்.பத்து ரூபாயை அவளுக்கு கொடுத்த பின் தன் பேரனை எழுப்ப ஆரம்பித்தார்.
"டேய் ராஜா ... எழுந்திரிபா" என்றார் கெஞ்சும் பாணியில். "காலைல ஸ்நானம் முடிச்சு பூஜைய பண்ண குழந்தைய எப்ப பழக்க போறாளோ?.." என்று தன் மகனையும் மாட்டு பெண்ணையும் நொந்து கொண்டார்.
இதற்குள் எழுந்த பேரன் "கடவுள்னா யாரு தாத்தா" என்று கேட்டான் தன் தாத்தாவிடம்..
"உன்ன மாதிரி அழுக்கா இருக்கவா எல்லாத்தையும் சுத்தம் பன்றவன்" என்றார் சற்று முகம் சுளித்தவராக.
"அப்ப .. நம்ம வேலாயி மாதிரியா...." என்றான் தூக்க களைப்பில்.
கோயிலில் பூஜை முடிந்து மணி அடித்தது... இவர் மனதிலும் தான்.....